ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்க இந்தியா முடிவு

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. நவம்பர் மாதத்திற்குள் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் மீது ஐ.நா. விதித்துள்ள பொருளாதார தடையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
iran-oil
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில் ”அமெரிக்காவின் அழுத்தத்தினால் இந்தியா இந்த முடிவை எடுக்கவில்லை, மாறாக ஐ.நா.வின் பொருளாதார தடை காரணமாக இத்தகைய முடிவை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். சீனாவிற்கு பிறகு ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளதாக சில அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வியாழக்கிழமை எண்ணெய் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஈரானின் எண்ணெய்க்கு பதிலாக மாற்றுப்பொருளை சுத்திகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தியவின் இத்தகைய முடிவு பரிசீலனையில் மட்டும் உள்ளது என்றும், செயல்பாட்டில் கொண்டுவர சிக்கல்கள் இருப்பதாக தகவல் தெரிந்த சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரான் மீதான பொருளாதார தடையை தொடர்ந்து ஒரு சில நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. ஆனால் கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுவதை இந்தியா குறைத்துள்ளது.

இதனை தொடர்ந்து சவுதி அரேபியா ஒரு நாளைக்கு 11 மில்லியன் பீபாய் எண்ணெய்யை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. ஈரானில் எண்ணெய் இறக்குமதி செய்த நாடுகள் சவுதி அரேபியாவை நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தை மதிப்பீட்டில் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 60 நாட்கள் வரை கடன் வழங்க ஈரான் அரசு முன்வந்துள்ளது. ஈரானில் இருந்து இந்தியா எண்ணெய்யை பெற்றால் இலவசமாக கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் என்றும், 60 நாட்களுக்கு கடனுதவி வழங்கப்படும் என்றும் ஈரானிய அரசு அறிவித்துள்ளது. ஈரான் எண்ணெய்க்கு பதில் சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் இருந்து எண்ணெய்யை பெற இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் பிரச்சனைகள் ஏதும் இல்லை என்றாலும் அவை சிறந்த பொருளாதார மதிப்பை அளிக்குமா என்பது சந்தேகப்படக்கூடிய ஒன்றாக உள்ளது.