புனே: புனேவில் நடந்துவரும் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் ஆட்டத்தில், 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 601 ரன்கள் எடுத்த இந்திய அணி டிக்ளேர் செய்ய, தென்னாப்பிரிக்காவோ ஆட்ட முடிவில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்தியக் கேப்டன் விராத் கோலி 254 ரன்களைக் குவித்தும் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. முன்னதாக துவக்க வீரர் மயங்க் அகர்வால் சதமடித்திருந்தார். ஆல்ரவுண்டர் ஜடேஜா 91 ரன்களில் அவுட்டாகி சதத்தைத் தவறவிட்டார்.

புஜாரா 58 ரன்களை அடித்தார். ரோகித் ஷர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சற்று இடைவெளிக்குப் பிறகு, விராத் கோலி டெஸ்ட் போட்டியில் சதமடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது இரட்டை சதமாகவும் அமைந்துவிட்டது. பின்னர், களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர்களில் டீன் எல்கர் 6 ரன்களிலும், மார்க்ரம் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

பவுமா தன் பங்கிற்கு 8 ரன்களை மட்டுமே சேர்த்தார். இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணியின் புரூயின் 20 ரன்களுடனும், நார்ட்ஜே 2 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஷமி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். கோலி ஏற்கனவே கூறியபடி, இந்திய அணி வெற்றியை நோக்கியே விளையாடும் என்று தெரிகிறது.