இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணி 3ஆவது டெஸ்டில் வெற்றி

நாட்டிங்காம்

ங்கிலாந்துடன் மோதிய மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Indian cricketers

இங்கிலாந்து நாட்டில் தற்போது பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.  ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ளது.   மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் நடைபெற்றது.   இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.

பேட்டிங்கில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 94.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது.  இந்திய அணி தலைவர் கோலி 93 ரன்களையும் ரஹானே 81 ரன்களையும் எடுத்தனர்.   அடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 191 ரன்களில் ஆட்டம் இழந்தது.   இந்திய வீரர்களான ஹர்திக்  பாண்டியா 5 விக்கெட்டையும், பூம்ரா மற்றும் இஷாந்த் தலா 2 விக்கட்டையும், ஷமி 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 168 ரன்கள் முன்னிலையில் இருந்தது.  இந்திய அணி 110 ஓவர்களில் 7 விக்கட் இழப்புக்கு 357 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.  தலைவர் கோலி 103 ரன்கள் எடுத்திருந்தார்.   அதை ஒட்டி இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 521 ரன்களை இந்தியா நிர்ணயித்தது.

இங்கிலாந்து அணி எவ்வளவோ முயன்றும் 104.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 317 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியாவிடம் 203 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.    இந்த வெற்றி மூலம் தற்போது இந்தியா 1:2 என்னும் கணக்கில் உள்ளது.   வரும் 30 ஆம் தேதி சௌத்தாம்ப்டனில் 4 ஆவது டெஸ்ட் பந்தயம் தொடங்க உள்ளது.