அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணி வெறும் 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.

இன்று ஒருநாள் நிலைத்து நின்று ஆடி, 200 ரன்கள் வரை சேர்த்துவிட்டால், பிறகு ஆஸ்திரேலியாவை ஒரு கை பார்க்கலாம் என்றிருந்த நிலையில், நிலைமை வேறுமாதிரி மாறிவிட்டது.

இரண்டாம் நாள் முடிவில், பிரித்விஷா விக்கெட்டை இழந்து 9 ரன்களை எடுத்திருந்த நிலை, இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியதிலிருந்து விக்கெட்டுகள் அப்படியே சரியத் தொடங்கின. இது டெஸ்ட் போட்டியா? அல்லது வேறு எதுவுமா? என்று யோசிக்கும் அளவிற்கு நிலைமை மோசமானது.

மயங்க் அகர்வால் 9 ரன்களுக்கு அவுட்டானார். மூன்றாவது விக்கெட்டாக களமிறக்கப்பட்ட பும்ரா 2 ரன்னுக்கு வெளியேறினார். புஜாரா இந்த முறை கம்மின்ஸ் பந்தில் டக் அவுட்.

கேப்டன் கோலி சற்று நிலைத்து நிற்பார் என்று பார்த்தால், அவர் 4 ரன்னுக்கு கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார். துணைக் கேப்டன் ரஹானே ஹேசில்வுட் பந்தில் டக் அவுட்டானார்.

தற்போது, அனுமன் விஹாரியும், விருத்திமான் சஹாவும் களத்தில் உள்ளனர். சஹா 2 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணி, முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் சேர்த்துப் பார்த்தால், தற்போதுவரை மொத்தமாக 72 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

பிட்ச் எந்தளவில் உள்ளது என்றே கணிக்க முடியாத அளவில் நிலைமை மாறியுள்ளது. இந்திய அணி, மொத்தமாக 100 ரன்களாவது ஆஸ்திரேலியாவுக்கு டார்க்கெட் நிர்ணயிக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.

ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.