உலகம் முழுவதும் கொரோனா தொற்றால், பெண்களைவிட ஆண்களே அதிகம் மரணமடையும் நிலையில், இந்தியாவில் நிலைமை வேறுவிதமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா, சீனா மற்றும் இத்தாலி நாடுகளின் நிலவரங்களைப் பார்த்தால், அங்கு பெண்களைவிட, அதிகளவில், ஆண்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதும்  மரணமடைந்ததும் நிகழ்ந்தது.

அதாவது, கொரோனா விஷயத்தில் வயதானவர்களாக இருப்பது எவ்வளவு ஆபத்தோ, அதேயளவு ஆணாக இருப்பதும் ஆபத்து என்ற கருத்தும் ஏற்பட்டது.

ஆனால், இந்தியாவில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. இங்கு, கொரோனாவால் பாதிக்கப்படுவோர்கள் அதிகம் ஆண்களாக இருந்தாலும், மரணமடைவோரில் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

கடந்த மே மாதம் 20ம் தேதி வரையிலான இறப்பு விகித நிலவரப்படி, பாதிக்கப்பட்ட பெண்களில் 3.3% பேர் மரணடைந்தனர். இது, ஆண்கள் மரண அளவான 2.9% என்பதைவிட அதிகம்.

மேலும், 40-49 வயது காலக்கட்டத்தில் உள்ள பெண்களின் மரண விகிதம் 3.2% ஆகும். இது, இதே வயதிலுள்ள ஆண்களின் இறப்பு விகிதமான 2.1% என்பதுடன் ஒப்பிடும்போது அதிகம். இந்தியளவில் மே மாதம் 20 வரையிலான நிலவரப்படி, ஒட்டுமொத்த மரணவிகிதம் 3.1% என்பதாக இருந்தது.