முதல் டெஸ்ட் – இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா..!

இந்தூர்: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது.

வங்கசேத அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 213 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் எண்ணிக்கையான 493 என்பதை எட்ட முடியவில்லை.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களோடு சேர்ந்து, அஸ்வினும் மிரட்டினார். அவர் மொத்தமாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆனால், மற்றொரு முக்கிய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுக்கு இப்போட்டியில் ஒரு விக்கெட்டும் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது.

வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி மொத்தமாக 7 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே முஷ்ஃபிகுர் ரஹிம் என்பவர் வங்கதேசம் தரப்பில் அரைசதம் அடித்தார். ஷமியின் பந்தில், அவருக்கான ஒரு எளிதான கேட்ச் வாய்ப்பை ரோகித் ஷர்மா தவறவிட்டதால் அவருக்கு இந்த சான்ஸ் எனலாம்.

அந்த அணியின் லிட்டன் தாஸ் மற்றும் ஹாசன் போன்ற பவுலர்கள் கடைசி கட்டத்தில் கணிசமான ரன்களை அடித்து, இந்திய அணியை சோதித்தனர். முடிவில், 213 ரன்களுக்கு அந்த அணி தனது போராட்டத்தை முடித்துக்கொண்டது. கடைசி 2 விக்கெட்டுகள் அஸ்வினுக்குக் கிடைத்தன.