பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி – ஆஸ்திரேலியாவை சந்திக்கும் இந்தியா!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், கோப்பை யாருக்கு என்ற பலப்பரீட்சையில் களமிறங்கவுள்ளன இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள்.

பெண்கள் டி-20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கிய வேகத்தில், முடிவுக்கும் வந்துள்ளது. மார்ச் 8ம் தேதி(ஞாயிறு) இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இந்திய அணி, புள்ளிகள் அடிப்படையில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டது. மற்றொரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டியில், டக்வொர்த் லீவிஸ் அடிப்படையில், 5 ரன்களில் வீழ்ந்தது தென்னாப்பிரிக்க அணி.
இதன்மூலம், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற ஆஸ்திரேலிய அணி, கோப்பையை ஏந்துவதற்கான போட்டியில், இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி, முதன்முறையாக இறுதிப் போட்டியில் ஆடுவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பெண்கள் அணி, முதன்முறையாக டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்திய ஆண்கள் அணி கேப்டன் விராத் கோலி மற்றும் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் ஆகியோர், இந்தியப் பெண்கள் அணிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.