புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனமான, சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம்(NCGG), மாலத்தீவு சிவில் சர்வீஸ் கமிஷனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, மாலத்தீவைச் சேர்ந்த 1000 சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கு, அடுத்த 5 ஆண்டு காலகட்டங்களில் இந்தியாவில் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்குமிடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், NCGG, மாலத்தீவு சிவில் சர்வீஸ் அமைப்பின் தேவைக்கேற்றபடி, பயிற்சிக்கான அளவுகோல்கள் மற்றும் நடைமுறையாக்க திட்டங்களை வரையறை செய்து பயிற்சியளிக்கும்.

பொது நிர்வாகம், மின்னணு ஆளுகை, சேவைகள் வழங்கல், பொதுக் கொள்கை, தகவல் தொழில்நுட்பம், ஆட்சிமுறை, மீன்பிடித்தலை சிறப்பாக கையாளுதல், வேளாண்மை சார்ந்த பயிற்சிகள், சுயஉதவிக் குழுக்களை அமைத்தல், நகர்ப்புற மேம்பாடு மற்றும் திட்டமிடல், நிர்வாக நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறான அம்சங்கள் பயிற்சியில் அடக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.