சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : த்ரில்லிங்கான போட்டியில் டிரா செய்து இறுதிப்போட்டிக்குச் சென்றது இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் நெதர்லாந்துடனான போட்டியில் டிரா செய்து இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

நெதர்லாந்தில், 37வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்துகொண்டிருக்கிறது.  இதில் நடப்பு சாம்பியன்  ஆஸ்திரேலியா, இந்தியா, அர்ஜென்டினா, பாகிஸ்தான், பெல்ஜியம், நெதர்லாந்து என, 6 அணிகள் கலந்துகொண்டிருக்கின்றன.

இறுதிப்போட்டிக்கு    ஆஸ்திரேலியா, 10 புள்ளிகளுடன் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு இந்தியா (7 புள்ளி), நெதர்லாந்து (6 புள்ளி) அணிகளுக்கு வாய்ப்பு  இருந்தது.

முதலிரண்டு லீக் போட்டியில் பாகிஸ்தான், அர்ஜென்டினா அணிகளை வீழ்த்திய இந்தியா, 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. பின், பெல்ஜியம் அணிக்கு எதிராக விளையாடிய 4வது போட்டியை டிரா செய்தது.

 

நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரை, முதல் போட்டியில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது.  பின் எழுச்சி கண்டு பெல்ஜியம், பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்தது. . நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் இந்தியா  – நெதர்லாந்து இடையே 5வது மற்றும் கடைசி லீக் போட்டி நடந்தது.

இப்போட்டியை இந்திய அணி குறைந்தபட்சம்  டிரா  செய்தாலே இறுதிப்போட்டிக்கு  முன்னேறலாம் என்ற நிலை நிலவியது.   நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரை கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலை.

ஆக இரு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டியாக இருந்தது.

கடந்த 2016ல் நடந்த பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி தோல்வியடைந்தது. நெதர்லாந்துக்கு எதிராக இன்று இந்தியா டிரா  அல்லது வெற்றி பெறும் பட்சத்தில், 2016 போல மீண்டும் பைனலில் ஆஸ்திரேலியாவை சந்திக்கலாம்  என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் தலா ஒரு கோல் போட்டன. இதையடுத்து போட்டி டிரா ஆனது.

ஆகவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது.