டில்லி

மீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடையை நீட்டித்துள்ளது.

கடந்த 1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டார். அதை ஒட்டி அந்த கொலைக்கு பொறுப்பான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதன் பிறகு ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல நாடுகள் விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்தன.

கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த தடையை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த 2017 ஆம் வருடம் வழஞ்கிய தீர்ப்பில், “விடுதலைப் புலிகள் அமைப்பு 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு எவ்வித அசம்பாவித செயல்களும் செய்யவில்லை. அதனால அந்த அமைப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை நீக்கப்படுகிறது” என தெரிவிக்கப்படது.

ஆயினும் இந்தியாவில் தடை தொடர்ந்து நீடித்து வந்தது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் குறிப்பாக தமிழகட்தில் விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவால் தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்துக்கு ஆதரவை பெருக்க கடும் முயற்சிகள் நடக்கின்றன. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன.
இதனால் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்ற யூகம் எழுந்துள்ளது. ஆகையால் அந்த யூகத்தின் அடிப்படையில் வரும் 2024-ஆம் ஆண்டு வரை விடுதலை புலிகள் இயக்கத்தின் தடை நீட்டிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.