உருமாறிய கொரோனா: பிரிட்டன் விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 7ந்தேதி வரை நீட்டிப்பு!

டெல்லி: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், பிரிட்டன் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒருவாரம் நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 7ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகநாடுகளை கடந்த ஓராண்டாக அச்சுறுத்திவரும் கொரோனா, தற்போது உருமாறிய நிலையில் பரவி வருகிறது.  இந்த வைரஸ் வீரியமிக்க தாக இருப்பதாகவும், வைரஸ், சாதரண வைரஸை விட 7% வேகமாக பரவுக்கூடிய தன்மை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பிரிட்டனில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்தியா உள்பட பல நாடுகள் பிரிட்டன் உடனான போக்குவரத்து சேவைகளை தற்காலிகமாக முடக்கியுள்ளன.   இந்தியாவிலும் கடந்த 23ந்தேதி,  பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு டிச.31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது விமான தடையை மேலும் ஒரு வாரம் நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, பிரிட்டனுடனான விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடையை ஜன.7ம் தேதி வரை நீடித்து விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில், தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உள்பட  6 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.