வாஷிங்டன்:

இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்கள் மற்றும் 20 லட்சம் நர்ஸ்கள் பற்றாக்குறை இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:

இந்தியாவில் 65% மருத்துவ செலவால், 5 கோடியே 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் உயிர் கொல்லி நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதுமான பயிற்சி இல்லை.

இந்தியாவில் ஒவ்வொரு 10,189 பேருக்கும் ஒர் அரசு டாக்டர் மட்டுமே உள்ளார். ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல் 483 பேருக்கு ஒரு நர்ஸ் இருக்கவேண்டும். ஆனால், இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்களும், 20 லட்சம் நர்ஸ்களும் பற்றாக்குறை உள்ளது.

இதனால் நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. புதிய நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் குறித்த ஆய்வு மற்றும் வளர்ச்சி கடந்த 1960-ம் ஆண்டிலிருந்து குறைந்து கொண்டே போகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.