இலங்கைக்கு என்றுமே இந்தியா முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி

டெல்லி: இலங்கைக்கு என்றுமே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. அதில் இரு நாட்டு தலைவர்களும் காணொளி வழியாக  ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் போது, இலங்கை தேர்தலில் வென்ற ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து  கூறினார்.

மேலும், அழைப்பை ஏற்று, இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து மோடி பேசியதாவது: இரு நாடுகள் இடையேயான உறவுகள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அண்டை நாட்டுக்கு  முதல் முன்னுரிமை என்ற கொள்கைப்படி அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற கோட்பாட்டின் படியும் இலங்கைக்கு என்றுமே இந்தியா  சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது என்றார்.

இலங்கை பிரதமர் ராஜபக்சே பேசியதாவது: கொரோனா வைரஸ் காலத்தில் இந்தியா மற்ற நாடுகளுக்காக பணியாற்றிய விதத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பின்னர், பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது