Random image

பாக்கிஸ்தான் உடனான அமைதி பேச்சு வார்த்தைக்கு இந்தியா ஒப்புதல்

இந்தியா – பாக்கிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்பதாக அறிவித்துள்ளது.

india-pakistan

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடத்தப்பட்டு வந்த அமைதி பேச்சுவார்த்தை சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வருகின்றன. கடந்த மாதம் பாக்கிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றார். அதன்பிறகு இந்தியா, பாக்கிஸ்தான் இடயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்தி இம்ரான் கான், நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றது முதல், பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். மேலும், பாகிஸ்தான் இனி எந்த நாட்டுடனும் போரில் ஈடுபடாது என்றும், மக்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்று இம்ரான் கான் வலியுறுத்தி வந்தார். அதைத் தொடர்ந்து அவர், அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.

இதற்கு தற்போது இந்தியா தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2016-ல் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.