டில்லி

சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பூசி விலையைக் குறைக்க இந்திய அரசு பேரம் நடத்தி வருகிறதாகத் தெரிய வந்துள்ளது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம் இரு கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு அனுமதி அளித்துள்ளது,.   இதில் ஒன்று சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் ஆக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா இணைந்து உருவாக்கி உள்ள தடுப்பூசி ஆகும்.  மற்றது பாரத் பயோடெக் உருவாக்கி உள்ள தடுப்பூசி ஆகும்.  இதுவரை எந்த நிறுவனத்திடமும் இந்திய அரசு கொள்முதல் ஆர்டர் அளிக்கவில்லை.

சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை அதிகாரி அதார் புனேவாலா கடந்த நவம்பர் மாதம் தங்கள் தடுப்பூசிகள் தனியாருக்கு ரூ.1000 ($ 13.55) எனவும் அரசுக்கு ரூ.250 ($3.4) எனவும் விற்கப்படும் என அறிவித்தார்.  தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் உடன் மூத்த அதிகாரிகள் விலை குறித்த பேரத்தை நடத்தி வருவதாகவும் மருந்தின் விலையை $3 எனக் குறைக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேறு சில பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் இந்த விலையை மேலும் குறைக்கவே பேச்சு வார்த்தைகள் நடப்பதால் விலை இன்னும் குறையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.   சுமார் 130 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட அதிகம் செலவாகும் என்பதால் இந்த விவகாரத்தில் கடும் பேரம் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும், சீரம் இன்ஸ்டிடியூட் நிர்வாகம் ஆகிய இரு தரப்பிலும் எவ்வித தகவலும் அளிக்க மறுக்கப்பட்டுள்ளது.,