டில்லி:

குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் என்ற சர்வதேச மருத்துவ இதழ் ஓரு ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. சுகாதார பராமரிப்பின் செயல்பாடு மற்றும் தரம் குறித்த பட்டியல் அதில் வெளியாகியுள்ளது. இதில் உலக நாடுகள் சுகாதார வளர்ச்சியில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளது.

 

195 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முதன் முறையாக பிரேசில், சீனா, இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான், மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் பிராந்தியங்களில் இந்த ஆய்வு நடந்துள்ளது. 195 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் இந்தியா 145வது இடத்தில் உள்ளது. 1990ம் ஆண்டில் இந்தியா 153வது இடத்தில் இருந்துள்ளது.

2016ம் ஆண்டின் மதிப்பீட்டில் இந்தியா 41.2 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த 26 ஆண்டுகளில் இந்தியா 16.5 புள்ளிகள் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. உலகின் சராசரி புள்ளியான 54.4 சதவீதத்தை விட இந்தியா எட்டவில்லை. பிரிக்ஸ் நாடுகளை விட இந்தியா பின் தங்கியுள்ளது. பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை விட இந்தியா சுகாதார வளர்ச்சியில் குறைந்து காணப்படுகிறது.

இந்தியாவிற்குள் கோவா, கேரளா மாநிலங்கள் அதிகபட்சமாக 60 புள்ளிகள் பெற்றுள்ளது. அஸ்ஸாம், உத்தரபிரதேசம் ஆகியவை மிக குறைந்த அளவில் 40 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. 1990ம் ஆண்டில் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச வளர்ச்சிக்கான இடைவெளி 23.4 புள்ளிகளாக இருந்தது. இது 2016ல் 30.8ஆக உயர்ந்துள்ளது.

பங்களாதேஷ், இலங்கை, பூட்டான் போன்ற அண்டை நாடுகளை விட இந்தியாவில் குறைந்த வளர்ச்சியையே அடைந்துள்ளது. அதேசமயம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாள் நாடுகளை விட அதிக வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளது.