இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சால் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ் அணி – 2வது நாள் போட்டியில் 6 விக்கெட் இழப்பு

--

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் அணி 94 ரன்களுக்கு 6 விக்கெட்டை பறிகொடுத்து தத்தளித்து வருகிறது. அந்த அணி இந்திய அணியை காட்டிலும் 555 ரன்கள் பின் தங்கியுள்ளது.

west-indies

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், அறிமுக வீரராக களமிறங்கிய இளம் பிர்த்வீ ஷா சதம் கடந்து 134 ரன்கள் எடுத்து கைகொடுக்க இந்திய அணி, முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து களமிறங்கிய விராட் கோலி 72 ரன்களிலும், ரிஷப் பண்ட் 17 ரன்களிலும் அவுட்டாகாமல் இருந்தனர். அடுத்து தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, கேப்டன் கோலி 139 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 100 ரன்களும் எடுத்து அசத்தினர். ரிஷ்ப் பண்ட் 92 ரன்கள் எடுத்த நிலையில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 649 ரன்கள் எடுத்த போது, டிக்ளேர் செய்தது.

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், அந்த அணி 94 ரன்களுக்கு 6 விக்கெட்டை பறிகொடுத்து தத்தளித்து வருகிறது. அந்த அணி இந்திய அணியை காட்டிலும் 555 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்திய அணி சார்பில் முகமது ஷமி, அதிகபட்சமாக 2 விக்கெட் கைப்பற்றினார். அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.