இஸ்ரேலிடம் 4,500 ஏவுகணைகள் வாங்குகிறது இந்தியா….விரைவில் ஒப்பந்தம்

டில்லி:

இஸ்ரேலில் இருந்து இந்தியா 4,500 ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் மதிப்பு 50 கோடி டாலராகும். இந்த ஸ்பைக் ஏவுகணைகள் இஸ்ரேல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 800 மீட்டரில் இருந்து 8 கி.மீ., தொலைவு வரை பறந்து சென்று தாக்க கூடிய திறன் கொண்ட ஏவுகணையாகும்.

இந்த ஒப்பந்தத்திற்கு மோடி அரசிடம் இருந்து இறுதி உத்தரவு வருவதற்காக இஸ்ரேட் தூதரக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இந்த ஒப்பந்தம் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது தற்போது வர்த்தக அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ இந்தியா வந்து சென்ற பின்னர் தான் இதற்கான ஒப்பந்தம் தயாரானது.

பல கட்டங்களை தாண்டி தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இஸ்ரேலின் ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் உடி அதாம் வரும் 2ம் தேதி இந்தியா வருகிறார். ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார்.

ஏற்கனவே 8,000 ஸ்பைக் ஏவுகணைகளை வழங்க ரஃபேல் நிறுவனம் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 3,000 ஏவுகணைகளை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதுவும் மேக் இன் இந்தியா திட்டத்தின் வழியாக தான் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்ததால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.