டெல்லி: ‘ஸ்புட்னிக் 5’  கொரோனா தடுப்பூசி தொடர்பாக, இந்திய அரசின் ஒத்துழைப்பை ரஷ்யா கேட்டுள்ளது. இதையடுத்து, ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்து உள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. ரஷியாவும் கொரோனா தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக் 5’  என்ற பெயரில் தடுப்பூசியை கண்டுபிடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின்  தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் பிரிவு  ஸ்புட்னிக் 5என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை நடைபெற்று வருகிறது.

ரஷியாவின் 45 மருத்துவ மையங்களில் 40,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்  ஸ்பூட்னிக் 5 தடுப்பூசியின் செயல்திறன், நோயெதிர்ப்புத் திறன் மற்றும் பாதுகாப்பு பற்றிய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்பூசியில் 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றதுமே, உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, அதை பதிவு செய்து இருப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் அறிவித்தார்.

இந்த நிலையில்’ஸ்புட்னிக் 5′   தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை என  ரஷியா வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையே  “ஸ்புட்னிக் 5 தடுப்பூசி தொடர்பாக  தகவல் பகிர்வுகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இது தொடர்பாக ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், இந்தியாவில் ஸ்புட்னிக் 5, தடுப்பூசி தயாரிப்பதற்கான முறையான கோரிக்கையை ரஷ்யா முன்வைத்துள்ளது என்றும், இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது, சில விரிவான தகவல்களுக்கு காத்திருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில், நாட்டின், முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜயராகவன், உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் சுகாதார ஆராய்ச்சி துறை செயலாளரையும், ரஷிய தூதர் நிகோலே குதாசேவ் நாடி  இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் மருத்துவ அமைப்புகள் அதிகம் உள்ளதால், ரஷியா,  மருந்து தயாரிப்பில், இந்தியாவின்  உதவியை நாடியுள்ளதாகவும், 3வது கட்ட மருத்துவ டிரையல் பரிசோதனையை இந்தியாவில் நடத்தவும் ரஷ்யா கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.