அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வழிபாடு நடத்தும் நாடு இந்தியா! டிரம்ப்

அகமதாபாத்:

ந்தியா வந்துள்ள டிரம்ப் அகமதாபாத் நிகழ்ச்சியில் பேசும்போது, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வழிபாடு நடத்தும் நாடு இந்தியா என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட சில மாநிலங்களில் என்ஆர்சி, சிஏஏ, என்பிஆர் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா வந்துள்ள டிரம்ப்,  மதத்தினரும் ஒற்றுமையாக வழிபாடு நடத்தும் நாடு  என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

2நாள் பயணமாக இன்று முற்பகல் 11 மணி அளவில் அகமதாபாத் வந்துள்ள டிரம்ப் தம்பதியினரை பிரதமர் மோடி விமான நிலையத்தில் சென்று வரவேற்றார். அவருக்கு அங்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  தொடர்ந்து, சாலை மார்க்கமாக ‘ அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில்  பங்கேற்க வந்தார்.

மோதேரா கிரிக்கெட்  மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் குழுமியிருந்தனர். அங்கு டிரம்ப் வந்ததும் இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி வரவேற்று பேசினார்.

பின்னர் பேசிய டிரம்ம், தனக்கு  இந்தியர்கள் அளித்துள்ள பிரம்மாண்ட வரவேற்புக்கு நன்றி  என்று கூறியவர், இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா உள்ளது என்றும்,  தமது உண்மையான நண்பர் பிரதமர் மோடி என்றும் பாராட்டினார்.

இந்தியாவுக்காக எனது நண்பர் பிரதமர் மோடி இரவு, பகலாக உழைக்கிறார். இந்தியாவிற்கு வந்திருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன், என்று தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே நாளை 20ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்  நடைபெற இருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், சுவாமி விவேகானந்தர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்றவர்களையும்  புகழ்ந்து பேசியவர், அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வழிபாடு நடத்தும் நாடு இந்தியா என்றும், இந்தியர்களின் ஒற்றுமை உலகுக்கே எடுத்துக்காட்டாக உள்ளதாகவும் புகழாரம் சூட்டினார்.

தெற்காசிய நாடுகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்தவர், இந்தியாவும், அமெரிக்காவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஐஎஸ் பயங்கரவாதம்  அமெரிக்காவில் ஒழிக்கப்பட்டு உள்ளது. எல்லைகளை கட்டுப்பாட்டில் வைக்க ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமை உள்ளது என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்தியா வரும் டிரம்ப், தற்போது நாட்டில் நடைபெற்று வரும் சிஏஏக்கு எதிரான போராட்டங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் மோடியுடன் விவாதிப்பார் என வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில்,  நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், இந்தியாவையும், மோடியையும் புகழ்ந்து பேசியதுடன், இஸ்லாமிய பயங்கரவாதத்தால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருப்பதுடன், அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வழிபாடு செய்யும் நாடு இந்தியா என்றும் கூறியிருப்பது…. சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது….

1 thought on “அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வழிபாடு நடத்தும் நாடு இந்தியா! டிரம்ப்

Comments are closed.