கொல்கத்தா:

‘‘இந்தியா கால்பந்து நாடு ’’ என்று சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (ஃபிஃபா) தலைவர் கியானி இன்பஃபன்டினோ அறிவித்துள்ளார்.

ஃபிஃபா கவுன்சில் கூட்டம் மற்றும் ஃபிஃபா 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை கால்பந்து இறுதி போட்டியில் கலந்துகொள்வதற்காக கியானி மேற்கு வங்கம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த போட்டியை சிறப்பாக அமைத்துக் கொடுத்த இந்தியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக நான் இங்கே வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா தற்போது கால்பந்து நாடாக மாறிவிட்டது’’ என்றார்.

முன்னதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் துணைத் தலைவர் சுப்ரதா தத்தா கொல்கத்தா விமானநிலையத்தில் கிலானியை வரவேற்றார். பின்னர் கிலானி தங்கிய ஓட்டலில் தங்கியுள்ள இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரஃபுல் படேலுடன் ஆலோசனை நடத்தினார்.

‘‘அப்போது 2019ம் ஆண்டில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை கால்பந்து போட்டியை நடத்துவது தொடர்பான ஏலம் குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர். தற்போது இந்தியாவில் நடந்து வரும் யு-17 போட்டி வெற்றி கரமாக நடத்தப்பட்டள்ளதால் இதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக’’ தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், ‘‘ஃபிஃபா எப்போதும் தொடர்ந்து உலக கோப்பை போட்டிகளை நடத்த ஒரே நாட்டிற்கு அனுமதி வழங்கியது கிடையாது. ஆனால், இங்கு நடக்கும் ஃபிஃபா கவுன்சில் கூட்டத்தில் இதற்கு விடை கிடைக்கும்’’ என உள்ளூர் போட்டி ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், கவுன்சில் கூட்டத்தில், 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கும் உலக கோப்பை போட்டியில் வீடியோ உதவியுடன் கூடிய நடுவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவள்ளது. எனினும் இந்த தொழில்நுட்ப திட்டம் இது வரை முறையாக நிரூபிக்கப்படவில்லை.

கடந்த டிசம்பரில் ஜப்பானில் நடந்த இந்த தொழில்நுட்பம் அமல்படுத்தியபோது குழப்பம் தான் நிலவியது. இந்த தொழில்நுட்பம் ‘கோல்’ முடிவுக்கு மட்டுமின்றி, பெனால்டி முடிவு, நேரடி சிகப்பு அட்டை, தவறான அடையாளம் காணுதல் போன்வற்றுக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

மேலும், கியானிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சார்பில் இரவு உணவு விருந்து அளிக்கப்படுகிறது. அவருடன் 35 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு வருகை புரிந்துள்ளது. எக்கோ பூங்காவில் நடக்கும் முன்னாள் கால்பந்து வீரர்களின் நிகழ்ச்சி ஒன்றில் கிலானி கலந்துகொள்கிறார். அக்டோபர் 28ம் தேதி சால்ட் லேக் விளையாட்டரங்கத்தில் நடக்கும் யு-17 இறுதி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறும் அணிக்கு கோப்பையை வழங்குகிறார்.