பெங்களூரு: செப்டம்பர் 22ம் தேதி நடைபெறவுள்ள இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டியில் வெல்லும் முனைப்புடன் உள்ளது இந்திய அணி. இப்போட்டியில் வென்றால் இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றும்.

மூன்றாவது போட்டியில் ரோகித் ஷர்மா மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஏற்கனவே இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு மிகவும் பரிச்சயமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இரண்டாவது டி-20 போட்டியில் விராத் கோலி அபாரமாக ஆடி 72 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் செயல்பட்டு வருகிறார். தோனியின் இடத்தில் அவர் தற்போது வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரின் பேட்டிங் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. அவரின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, ரோகித் ஷர்மாவுடன் சேர்ந்து, தனது ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் புதிய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட். முன்னாள் வீரர் கவாஸ்கர் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.