இலங்கை அரசியலில் இந்தியாவுக்கு பெரும் பங்கு உள்ளது : ராஜபக்சே

கொழும்பு

லங்கை அரசியலில் இந்தியாவுக்கு பெரும் பங்கு இருந்தாலும் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடாது என நம்புவதாக ராஜபக்சே கூறி உள்ளார்.

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே கடந்த 2015 ஆம் வருடம் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.   அவருடைய அமைச்சரவை முன்னாள் சகாவான மைத்ரிபால சிரிசேனா எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.   தற்போது 2019 முடிவில் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

மகிந்தா ராஜபக்சே ஒரு செய்தியாளர் சந்திப்பில், “கடந்த 2015 ஆம் வருட தேர்தலில் இந்திய அரசின் உளவு அமைப்பான ‘ரா’ மேற்கத்திய சக்திகளுடன் இணைந்து செயல்பட்டது.  அதனால் எனக்கு எதிரான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி அடைந்தது.   இது குறித்து நான்  இந்தியப் பிரதமர் மோடியைக் குறை கூறவில்லை.   ஏனெனில் அவர் அப்போது அரசுப் பொறுப்பை ஏற்று ஒரு வருடம் கூட முடியவில்லை.

முந்தைய இந்திய அரசு சீனாவுடன் எங்களுக்கு நட்பு இருந்ததாக தவறாக கருதி இருந்ததால் இந்திய உளவுத்துறை அவ்வாறு செயல்பட்டிருக்கலாம். இலங்கை அரசியலில் இந்தியாவுக்கு பெரும் பங்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.   அதே நேரத்தில் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடாது என நான் நம்புகிறேன்.

நான் ஏற்கனவே இருமுறை இலங்கை அதிபர் பதவி வகித்துள்ளேன்.   இலங்கை அரசியல் அமைப்பு சட்ட திருத்தப்படி இனிமேல் நான் போட்டியிட முடியாது.  அதனால் நான் வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.    வேறு யார் போட்டியிடுவார்கள் என்பதை சரியான நேரத்தில் முடிவு எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.