டில்லி

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை எதிர்க்கும் மலேசியாவில் இருந்து பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியை இந்தியா குறைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அரசு விதி எண் 370ஐ ரத்து செய்து காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.  அத்துடன் அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.   இதையொட்டி மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  இந்தியாவின் நடவடிக்கைக்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

கடந்த மாதம் நடந்த ஐநாசபை பொதுக் குழுக் கூட்டத்தில் பாகிஸ்தான் இந்த பிரச்சினையை எழுப்பிய போது மலேசியப்  பிரதமர் மகாதிர் முகமது அந்நாட்டுக்கு ஆதரவைத் தெரிவித்தார்.  அத்துடன் இந்தியா காஷ்மீரைப் படையெடுத்து ஆக்கிரமித்துள்ளதாகவும் பாகிஸ்தானுடன் இணைந்து இது குறித்து தீர்வு காணும் நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இது இந்திய அரசுக்கு கடும் அதிருப்தியை அளித்தது.   அதையொட்டி மலேசியாவில் இருந்து வாங்கப்படும் பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியைக் குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளது.    அந்த தகவலில் மலேசியாவின் காஷ்மீர் குறித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பை காட்ட இவ்வாறு நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா சமையல் எண்ணெயை மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.  இதைல் பாமாயில் மட்டும் மலேசியாவில் இருந்து 39 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது.   இனி மலேசியாவுக்கு பதிலாக இந்தோனேசியா, அர்ஜெண்டினா, உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.