நெட்டிசன்:

காந்தி ஜெயந்தி
————————–

மகாத்மா என்ற

மகத்தான

அடைமொழியோடுதான்

நீர் அறிமுகமானீர்….

புலால் மறுப்பு

ஜீவ காருண்யம்

கதராடை

நேரம் தவறாமை

உப்பு சத்தியாக்கிரகம்

அஹிம்சை நாயகன்

என்றல்லவா

பள்ளி பருவத்தில்

 ஒப்பாருமிக்கா

ஒரே ஆத்மா என

ஓதப்பட்டது ….

 

உம் சமகாலத்தில்

வாழ்ந்த சில பல

உம் எதிரிகளே

உம்மை

தூற்றியதில்லையே

எம்மானே ..

மேலைநாடு சென்று

பாரிஸ்டர் எனும்

பட்டம் பெற்ற நீர்

எம்மண்ணின்

சேரிகளில்

“மந்தையில நின்னாலும்

வீரபாண்டி தேரு” என

முதல் மரியாதையோடு

அல்லவா  முன்பு

வாழ்ந்தீர் தேச பிதாவே…

 

கால் நூற்றாண்டுமுன்

காந்தி சீடர் என்பதே

கௌரவமே ஐயா….

 ஆனால் இன்று

காலையில் எழுந்து

காந்தி ஜெயந்தி

வாழ்த்து உமக்கு

பதிவிடலாம் என்றால்

பதறுகிதே நெஞ்சம்...

 

ஆமா சாமி

காந்தி தேச விரோதி

கோட்சே புனிதர்

வரலாற்றை

திரித்து விட்டனர் என

வரலாற்றுக்கு வரும்

லகரம்  தெரியாத சில

லகுடபாண்டிகள்

பொதுவெளியில்

உம்மை நிற்க வைத்து

வாய்க்கு வந்தபடி

வசைபாடுகின்றனர்…

 

என்ன செய்ய

வெஞ்சிறையில்

வேதனையுற்று நீர்

வாங்கிக்கொடுத்த

சுதந்திரமே

அப்புனிதர்களுக்கு

வசதியாக போயிற்று….

 

எனவே

மனதிற்குள்

மௌனமாக

போற்றுகிறேன்…

“இந்தியா என்றால்

மகாத்மா தான்

மகாத்மா என்றால்

இந்தியா தான்”

கவிதை:  பா.திருநாகலிங்க பாண்டியன்

மதுரை.