கொரோனாவின் ஊற்றுக்கண்ணாகும் நிலையை நோக்கி நகரும் இந்தியா : சுகாதார நிபுணர் எச்சரிக்கை

டில்லி

கொரோனாவின் ஊற்றுக் கண்ணாகும் நிலையை நோக்கி இந்தியா செல்வதாகச் சுகாதார நிபுணர் ஆஷிஷ் ஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல சுகாதார நிபுணரும் ஹார்வர்ட் சர்வதேச சுகாதார கல்வி நிலைய இயக்குநருமான ஆஷிஷ் ஜா சென்ற மாத இறுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் ஒரு இணையச் சந்திப்பை நடத்தினார்.   ராகுல் காந்தி தற்போது பல்துறை நிபுணர்களைச் சந்தித்து வருகிறார்.  அந்த வரிசையில் அவரை சந்தித்த ஆஷிஷ் ஜா கொரோனா பரிசோதனைகளைத் தீவிரமாக்குவது குறித்துப் பல ஆலோசனைகள் அளித்தார்.

சமீபத்தில் ஆசிஷ் ஜா ஒரு செய்தி ஊடகத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.  அந்த பேட்டியில் ஆஷிஷ் ஜா, “இந்தியா சர்வதேச அளவில் ஹாட் ஸ்பாட்டாகி வருவது மிகவும் கவலையை அளிக்கிறது.   இதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க மேலும் பல மாதங்கள் ஆகும் என்பதால் நாம் தற்போது ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறோம்.  தடுப்பூசி கண்டுபிடிக்கக் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்னும் நிலையில் கொரோனா பரவுதலை தடுக்க இந்தியா என்ன செய்ய உள்ளது என்பதே கேள்வியாகும்.

தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு மூன்று வழிகள் மட்டுமே உள்ளன.  முதலாவது சமூக இடைவெளியைப் பின்பற்றல்.  அதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இரண்டாவது பரிசோதித்தல், கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் ஆகும்.  மூன்றாவது முகக் கவசம் அணிதல் ஆகும்.

முகக்கவசம் அணிதல் என்பது மக்கள் அனைவரும் அவசியம் செய்ய வேண்டிய நடவடிக்கை ஆகும்.   தற்போது பரிசோதனை எண்ணிக்கையில் நாம் அதிகம் முன்னேறி உள்ளோம்  ஆனால் எங்கு அதிகம் பரிசோதனை தேவைப்படுகிறது என்பதில் கவனம் செலுத்தப்படுவதில்லை.   ஊரடங்கை நாம் பின்பற்றுவதை விட எப்படித் தவிர்ப்பது என்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறோம்.

இந்தியாவில் தற்போது உள்ள நோயாளிகள் எண்ணிக்கையைக் குறித்து எனக்கு அதிக கவலை இல்லை.  சராசரியாக பார்க்கும் போது இந்தியாவில் குறைந்த பாதிப்பு மற்றும் குறைந்த மரணமே ஏற்பட்டுள்ளது.   ஆனால் தினம் தினம் இது அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது.   க்ட்ந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்த அதிகரிப்பு எண்ணிக்கையை விட  இப்போது பன்மடங்கு அதிகரித்து தினம் 10 முதல் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.  இதைக் குறைக்க என்ன வழி?   ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஆனால் அதனால் கொரோனா பரவுதல் குறையவில்லை

ஊரடங்கு என்பது பரிசோதனை மற்றும் கண்டறிவதற்கான தேவைகளைத் தயார் செய்ய பயன்படுத்த பிறப்பிக்கபடுவ்தாகும்.  ஆனால் இந்தியாவை பொருத்தவ்ரை தேவைகளைத் தயார் செய்ய மிக அதிக நேரம் ஆகிறது.  மேலும் இந்த ஊரடங்கை இதற்காக முழுமையாக பயன்படுத்தவில்லை என நான் கருதுகிறேன்.   இதனால் தான் பாதிப்பு அதிகரித்துள்ளது.   இதனால் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது..   ஆனால்  நாடு முழுவதும் சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.  எங்கு அதிக அளவில் பாதிப்பு உள்ளதோ அங்கு நாம் இன்னும் பரிசோதனை நடத்தத் தொடங்கக்கூட இல்லை எனக் கூறலாம்.

அரசியல்வாதிகளை பொறுத்த வரை பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டவே விரும்புவார்கள்.  இது பிரேசில் மற்றும் அமெரிக்க அதிபர் ஆகியோரும் செய்து வருவதாகும்.   பரிசோதனையைக் குறைப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை குறையாது.  கொரோனா பரவுவது குறைந்தால் மட்டுமே நோயாளிகள் எண்ணிக்கை குறையும்.    இந்தியாவைப் போன்ற ஒரு துணைக் கண்டத்தில் பல நோயாளிகள் சோதனை செய்யப்படாமல் போக வாய்ப்பு உண்டு.  அவர்களால் பரவுதல் மேலும் மேலும்  அதிகரிக்கக்கூடும்.

இவ்வாறு பரவுதல் அதிகரிக்கும் போது இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை  அமெரிக்காவை விட அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.  அந்த நிலையை நோக்கி தற்போது இந்தியா சென்றுக் கொண்டுள்ளது.  இதே நிலை நீடித்தால் கொரோனாவின் ஊற்றுக்கண்ணாக இந்தியா ஆகி விடலாம். எனவே அதைத் தவிர்க்க வேண்டும்.

தற்போது இந்தியாவில் தினசரி சுமார் 30000 முதல் 50000 வரை பாதிக்கலாம் என எனக்கு அச்சம் உள்ளது.  ஆனால் 10 முதல் 12 ஆயிரம் பேர் மட்டுமே கண்டுபிடிக்க படுகின்றனர்.    இந்தியாவில் ஏற்கனவே சமூக பரவல் தொடங்கி விட்டது என்பது அனைவருக்கும் தெரிய வந்தாலும் அதை மறைக்கும் வேலை நடைபெறுகிறது.   அதை விடுத்து நாம் எவ்வாறு இதில் இருந்து மீள்வ்து என்பதைக் குறித்து யோசிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.