இந்தியா ஒற்றை அடையாளத்திற்கான நாடல்ல: ராகுல் காந்தி

பத்தனம்திட்டா: காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டுமென செயல்படும் பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்களை எப்போதுமே காங்கிரஸ் கட்சி அழிக்க நினைத்ததில்லை என்று கூறியுள்ள ராகுல் காந்தி, இந்தியா ஒற்றை அடையாளத்திற்கான நாடல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது, “ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா போன்ற இயக்கங்களின் கொள்கைகளை எதிர்த்து போராடும் நாங்கள், அவர்களும் தங்களுக்கான கொள்கைகளைக் கொண்டிருக்கலாம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே செயல்படுகிறோம். எங்களின் நோக்கம் அந்த இயக்கங்களை அழிப்பதல்ல.

ஆனால், நாடு முழுவதும் ஒரே சிந்தனை, ஒரே எண்ணம், ஒரே மொழி மற்றும் ஒரே வரலாறு ஆகியவைதான் நிலவ ‍வேண்டுமென்ற ஆபத்தான சிந்தனை கொண்ட பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களை எதிர்த்து நாங்கள் பெரிய போரை நடத்தி வருகிறோம்.

நாடெங்கிலும் ஒலிக்கும் வேறுபட்ட குரல்களே, நாட்டை வழிநடத்த வேண்டுமென நாங்கள் நம்புகிறோம்.

ஒவ்வொரு வரலாறும், ஒவ்வொரு மொழியும், ஒவ்வொரு பண்பாடும் மதிக்கப்பட வேண்டும் என்பதும், எந்தவொரு கோட்பாடும் அழிக்கத்தக்கதல்ல என்பதே எங்களின் கொள்கை.

ஒவ்வொரு அமைதியான சிந்தனையும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு ஆபத்தான, வகுப்புவாத சிந்தனையும் எதிர்க்கப்பட வேண்டும்” என்றார்.

– மதுரை மாயாண்டி