புதுடெல்லி: உலகளவில் அதிகளவு ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில், இந்தியாவிற்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட நிலவரத்தின் அடிப்படையில் இந்த இடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரிலான அமைப்பு நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் வரும் நாடு சவூதி அரேபியா. பாகிஸ்தானுக்கு 11வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆயுதங்கள் வழங்குநராக ரஷ்யா இருந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலங்களில், இந்திய ராணுவத்தை வலுப்படுத்தும் வகையில், ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிகள், பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை, இந்தியா அதிகளவில் கொள்முதல் செய்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் பெரிய ஆயுதங்கள் இறக்குமதியில் சவுதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. இது ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் 36% என்ற அளவில் உள்ளது.

ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில், இந்தியாவுக்கு 23வது இடம் வழங்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய வாடிக்கையாளர்களாக, மியான்மர், இலங்கை மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகள் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளன.