டெல்லி: இந்தியாவில் முதலீடு செய்ய 200க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள்  அனுமதிக்காக காத்திருக்கும்  நிலையில்,   45 சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து உள்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் இதில் கிரேட்வால், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லடாக் எல்லையில் நடைபெற்ற இந்தியா சீன வீரர்களுக்கு இடையேயான மோதலைத் தொடர்ந்து, சீன நிறுவனங்களின் பொருட்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில், சீன நிறுவனங்களை புறக்கணிக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சீன முதலீடு குறித்து இந்திய அரசு எச்சரிக்கையை வெளியிடும் வகையில், சமீபத்தில் தனது புதிய அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) கொள்கையை  மாற்றியது.  இந்தியாவுடன் நில எல்லைகளைக் கொண்டுள்ள நாடுகளிடம் இருந்து பெறப்படும் அனைத்து முதலீடுகளுக்கும் அரசின் முன் ஒப்புதல் தேவை என்று கூறியது. அதன்படி இந்தியாவுடன் நிலப்பரப்பை பகிர்ந்து கொள்ளும் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்பட்சத்தில் மத்திய உள்துறை அமைச்சக அனுமதியை பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

இதனால் சீனாவின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  ஏற்கனவே,  ஆட்டோமொபைல்கள், எலக்ட்ரானிக்ஸ், ரசாயனங்கள் மற்றும் ஜவுளி போன்ற துறைகளில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டு வரும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை, எல்லைப்பகுதியில் இருந்து இரு நாட்டு ராணுவமும் வாபஸ் பெற்று வரும் சூழலில், அண்டை நாட்டுடன் நல்லிணக்கத்தை பேணும் வகையில், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய உள்துறை ஆலோசித்து வருகிறது.

அதன்படி, தேசிய பாதுகாப்புக்கான அபாயத்தைப் பொறுத்து 200 க்கும் மேற்பட்ட முன்மொழியப்பட்ட சீன முதலீடுகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அதில், முன்னோக்கி செல்லும் திட்டங்கள் குறித்து மதிப்பாய்வு செய்த குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என கூறப்படுகிறது.

சீனாவை சேர்ந்த கார் நிறுவனங்கள் இந்திய கார் சந்தையில் வர்த்தகத்தை துவங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவே, சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் தனது கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார்ஸ் மூலமாக இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவக்கிவிட்டது. எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் காரான, ஹெக்டர் எஸ்யூவி ரக காருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

அதுபோல, சீனாவை சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான கிரேட்வால் மோட்டார்ஸ் இந்திய கார் சந்தையில் களமிறங்க இருக்கிறது. செயிக் குழுமத்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் பாணியில் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனமும் தனது  ஹவல் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்தியாவில் ஹவல் பிராண்டை முறைப்படி ஏற்கனவே பதிவு செய்துள்ளதுடன், 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவின்   தலேகான் பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையை கையகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள கிரேட் வால், நாட்டில் நடவடிக்கைகளை நிறுவுவது அதன் உலகளாவிய மூலோபாயத்தின் முக்கிய பகுதியாகும் என்று முன்னர் கூறியது. இந்த ஆண்டு முதல் இந்தியாவில் கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது, மேலும் மின்சார வாகனங்களைக் கொண்டுவருவதையும் அது திட்டமிட்டிருந்தது. ஆனால்,  இரு நாடுகளுக்கும் இடையே எழுந்த எல்லை பிரச்சினையால், மேற்கொண்டு பணிகள் தொடர முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில்,  கிரேட்வால், எம்ஜி மோட்டார்ஸ் உள்பட 45 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து உள்துறை அமைச்சகத்தின் தலைமையிலான ஒரு குழு ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதில், ஆரம்ப ஒப்புதல்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட 45 திட்டங்களில் பெரும்பாலானவை உற்பத்தித் துறையில் உள்ளன, என்றும், இவைகள்,  தேசிய பாதுகாப்பைப் பொறுத்தவரை உணர்திறன் இல்லாததாகக் கருதப்படுகிறது.

முதல்கட்டமாக சில நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து உள்துறை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.