Random image

மும்பை: புல்லட் ரெயில் திட்டத்துக்கு பழ விவசாயிகள் எதிர்ப்பு….திட்டம் நிறைவேறுவதில் சிக்கல்

மும்பை:

பிரதமர் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் அரசு நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகளை வாரந்தோறும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

எனினும் இதற்கு அவ்வப்போது பல வகைகளில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தடைகள் அனைத்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று டோக்கியோவுக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிக்கு சப்போட்டா, மாம்பழ விவசாயிகள் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த எதிர்ப்பு காரணமாக வரும் டிசம்பருக்குள் நிலம் கையகப்படுத்தும் பணியை முடிக்க நிர்ணயிப்பட்ட இலக்கை பூர்த்தி செய்வதில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

உள்ளூர் அரசியல்வாதிகள் பின்னணியுடன் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொதுவாகவே இந்தியாவில் எந்த திட்டத்துக்கு நில கையகப்படுத்தப்பட்டாலும் எதிர்ப்பு கிளம்புவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

இதேபோல் மகாராஷ்டிராவில் உலகின் பெரிய எண்ணை நிறுவனமான சவுதி அராம்கோ 4 ஆயிரத்து 400 கோடி டாலர் மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்த நிலம் கையகப்படுத்த போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.