நியூயார்க்: 

பிறந்த நாட்டை விட்டு, வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்ந்துள்ளோர் பட்டியலில் இந்தியா முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

ஐ.நா., சபையில், சர்வதேச புலம் பெயர்ந்தோர் அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“தாங்கள் பிறந்த நாட்டை விட்டு, வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்வது உலகம் முழுதும் நடந்துவருகிறது. கடந்த  15 வருடங்களில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.

இதனால், புலம் பெயரும் நாடுகளில், மக்கள் தொகை  உயர்கிறது. அது, அந்த நாடுகளுக்கு கூடுதல் சுமையை உருவாக்குகிறது.

டந்த, 2000 – 15 வரையிலான ஆண்டுகளில் வட அமெரிக்காவின் மக்கள் தொகையில், 42 சதவீதம் புலம் பெயர்ந்தவர்கள்.  அதே நேரத்தில், ஐரோப்பாவுக்கு புலம் பெயர்வது தடுக்கப்பட்டதால், அங்கு மக்கள் தொகை குறைந்துள்ளது.

பிறந்த நாட்டை விட்டு, மற்றொரு நாட்டுக்கு புலம் பெயர்வதில், இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த, 1.7 கோடி பேர், வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்ந்து உள்ளனர். அதில், 50 லட்சம் பேர், வளைகுடா நாடுகளில் வசிக்கிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, 30 லட்சம் பேர், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுக்கு, தலா, 20 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர்.

இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ இருக்கிறது. இந்நாட்டைச் சேர்ந்த, 1.3 கோடி பேர் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ள நாடுகள் விவரம்.

ரஷ்யாவைச் சேர்ந்த, 1.10 கோடி பேர்; சீனாவைச் சேர்ந்த, 1 கோடி பேர்; வங்கதேசத்தைச் சேர்ந்த, 70 லட்சம் பேர்; சிரியாவைச் சேர்ந்த, 70 லட்சம் பேர்; பாகிஸ்தான் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த தலா 60 லட்சம் பேர், மற்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து இருக்கிறார்கள்.

உலகம் முழுதும் 25.8 கோடி பேர், தாங்கள் பிறந்த நாட்டை விட்டு, மற்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து இருக்கிறார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.