மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு 3ம் இடம்!!

டில்லி:

உலகளவில் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்று பொருளாதார கூட்டுறவு அமைப்பு மற்றும் உணவு, வேளாண் அமைப்பு ஆகியவை வெளியிட்டுள்ள 2017-26ம் ஆண்டிற்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலை அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், ‘‘ கடந்த ஆண்டு மட்டும் 1.56 மில்லியன் டன் மாட்டு இறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் மூன்றாவது ஏற்றுமதியாளர் என்ற பெருமையுடன் சர்வதேச ஏற்றுமதியில் 2026ம் ஆண்டில் 16 சதவீத பங்களிப்பை அளிக்கும்.

மாட்டு இறைச்சி ஏற்றுமதி எந்த வகையிலானது என்பதை குறிப்பிடப்படவில்லை. பெரும்பாலும் எருமை இறைச்சியாக தான் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 3.63 லட்சம் டன் மாட்டு இறைச்சியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்த அளவு கடந்த 10 ஆண்டுகளாக இதே நிலையில் தான் உள்ளது.

2016ம் ஆண்டு உலகளவிலான மாட்டு இறைச்சி ஏற்றுமதி 10.95 மில்லியன் டன்னாக உள்ளது. இது 2026ம் ஆண்டில் 12.43 மில்லியன் டன்னாக இருக்கும். மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் பிரேசில் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.