மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி: செ.கு.தமிழரசன் பேட்டி

சென்னை: 

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன்  இந்திய குடியரசு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி,  நாளை பிற்பகல் 2 மணிக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் திடீரென ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்துக்கு வந்து கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,   நாடாளு மன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

மாற்று அரசியலுக்கு மாற்றுக் கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றவர், குறுகிய காலத்தில் கட்சி ஆரம்பித்த கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் சின்னம் பேட்டரி டார்ச் மிகக் குறுகிய அளவில் சாதாரண மக்களிடையே சென்று சேர்ந்துள்ளது என்று கூறினார்.

அதிமுக பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதை நாங்கள் ஏற்கவில்லை என்ற தமிழரசன், நாங்கள் பாஜகவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இல்லை. அதனால்தான் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றார்.

இதையடுத்து,  நாடாளுமன்றத் தேர்தலில் 1 தொகுதியிலும், தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்த லில் 3 தொகுதிகளிலும் இந்திய குடியரசுக் கட்சி போட்டியிட உள்ளது. இந்த தொகுதிகளில்,  மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்திலேயே  குடியரசு கட்சி போட்டியிடும் என்று கூறியவர்,  தமிழகத்திற்கு தேவையான ஒரு மாற்று அரசியலை மக்கள் நீதி மய்யம் வழங்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

கார்ட்டூன் கேலரி