ரஹானே & ஜடேஜா அசத்தல் – பாக்ஸிங் டே டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்தியா!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட் கைவசம் இருக்கையில், 82 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

கேப்டன் ரஹானே 104 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் ஜடேஜா துணை நிற்கிறார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்த நிலையில், இன்றைய நாள் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 195ஐ நெருங்குவதற்குள் மொத்தம் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

எனவே, இன்றைய ஆட்டநேர முடிவிற்குள் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவிற்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேப்டன் ரஹானேவும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் எதிர்பார்த்த இன்னிங்ஸை ஆடத் தொடங்கினார்கள். இவர்களை, ஆஸ்திரேலிய பவுலர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்ட அவர்கள், அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றனர். இன்றைய நாளின் ஆட்டநேர முடிவில், 200 பந்துகளை சந்தித்த ரஹானே 104 ரன்களுடனும், 104 பந்துகளை சந்தித்த ஜடேஜா 40 ரன்களையும் எடுத்து களத்தில் நிற்கின்றனர்.

இந்திய அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை அடித்துள்ளது. ஆஸ்திரேலியாவைவிட தற்போதைய நிலையில் 82 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்றுள்ளது.

நாளையும் இந்திய பேட்ஸ்மென்கள் நிலைத்துநின்று ஆடி, இன்னும் 100 ரன்களுக்கு மேல் அடிக்கும் பட்சத்தில், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கலாம். அதன்மூலம் வெற்றியையும் உறுதி செய்யலாம்.