வங்கதேச லெஜண்ட்ஸ் அணியை ஊதித்தள்ளிய சேவாக் & சச்சின் கூட்டணி!

ராய்ப்பூர்: சாலைப் பாதுகாப்பு உலக டி-20 கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியில், இந்தியாவின் முன்னாள் நட்சத்திரங்கள் அடங்கிய அணி, வங்கதேசத்தின் முன்னாள் நட்சத்திரங்கள் அடங்கிய கிரிக்கெட் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஊதித் தள்ளியது.

இந்திய அணியில், சச்சின், சேவாக், யுவ்ராஜ்சிங், இர்பான் பதான், இர்பான் பதான், வினய் குமார், மூனாஃப் படேல் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

சத்தீஷ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச முன்னாள் வீரர்கள் அடங்கிய அணி, 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 109 ரன்களே எடுத்தது. அந்த அணியின் நஸிமுதின் மட்டுமே அதிகபட்சமாக 49 ரன்களை அடித்தார்.

பின்னர், மிகவும் சிம்பிளான இலக்கை நோக்கிய ஆட்டத்தை தொடங்கினர் இந்தியாவின் சேவாக்கும் சச்சினும். ஆனால், இதில் பெரிய பேயாட்டம் ஆடிவிட்டார் சேவாக்.

மொத்தம் 35 பந்துகளை சந்தித்த சேவாக், 5 சிக்ஸர்கள் & 10 பவுண்டரிகளுடன் 80 ரன்களை சேர்த்தார். மொத்தம் 70 ரன்கள் ஓடாமலேயே எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கடுத்து, சச்சின் டெண்டுல்கர் 26 பந்துகளை சந்தித்து, 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களை சேர்த்தார். இவர்கள் இருவருமே நாட்அவுட்டாக இருந்து, மொத்தம் 10.1 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்துவிட்டது இந்தியா.

வீர‍ேந்திர சேவாக், பல நாட்கள் சேர்த்து வைத்திருந்த வெறியை, இன்று காட்டுவதுபோல் ஆடினார்.