டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக முதன்முறையாக வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.

உலகின் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அனைத்து அரசுகளும் வைரசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு 7 பேர் இந்தியாவில் உயிரிழந்து உள்ளனர். கொரோனா அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

அரசு உத்தரவுப்படி, சில நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரசை தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் அறிவித்துள்ளது. இந் நிலையில், உச்ச நீதிமன்றமும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நீதிமன்ற வளாகத்துக்குள் யாரும் தேவையில்லாமல் வரக்கூடாது. அனைத்து ஊழியர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தபின்பே நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பல நீதிபதிகள் கொண்ட அமர்வு செயல்படாது. தேவைப்பட்டால் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அவசர வழக்குகளை விசாரிக்கும். எந்த அவசர வழக்காக இருந்தாலும் கானொளி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக வழக்கு விசாரணைகளை வீடியோ கான்பரன்சிங் முறையில் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் வாதிடும் போது நீதிபதிகள் வேறு அறையில் இருந்து விசாரிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களின் அறைகளையும் மூடுமாறு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே உத்தரவிட்டுள்ளார்.