கிரிக்கெட்: இந்திய அணிக்கு முதல் தோல்வி!

ஜோகனஸ்பர்க்:

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.    இந்த தொடரில் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்கு இதல் முதல் தோல்வி ஆகும்

தற்போது தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மொத்தம் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.  இதுவரை முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என முன்னிலையில் இருந்தது.   ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியில், ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. கேதர் ஜாதவ் தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் நீக்கப்பட்டு, பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
இந்த 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் சதம் கடந்தார். இதன்மூலம் இந்தியா விளையாடிய 100வது ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். இந்திய அணி, 50 ஓவரில், 289 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் ரோகித் சர்மா (5) ஏமாற்றினாலும் கேப்டன் விராத் கோஹ்லி (75) அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய ஷிகர் தவான், 109 ரன்கள் விளாசினார். ரகானே (8), ஸ்ரேயாஸ் ஐயர் (18), ஹர்திக் பாண்ட்யா (9) புவனேஷ்வர் குமார் (5), ‘ரன்-அவுட்’ ஆனார்கள்.  மொத்தம்  50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 289 ரன்கள் எடுத்தது. தோனி (42), குல்தீப் (0) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா, நிகிடி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம், ஆம்லா ஜோடி நல்ல துவக்கத்தை அளித்தனர். தென் ஆப்ரிக்காவுக்கு 43 ரன் சேர்த்திருந்த போது, பும்ரா பந்தில் மார்க்ரம் (22) அவுட்டானார். மீண்டும் மின்னல் மற்றும் மழை காரணமாக தென் ஆப்ரிக்க அணி, 7.2 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 43 ரன் எடுத்திருந்த போது போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன்பின், 28 ஓவரில், 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என, ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி இலக்கு மாற்றப்பட்டது.  தென் ஆப்பிரிக்க அணியின் ஆம்லா (33), மில்லர் (39), கிலாசன் (43), பெலுக்வாயோ (23) கைொடுக்க, 25.3 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தற்போது இன்னும் 2 போட்டிகள் பாக்கி உள்ளதால் தென் ஆப்ரிக்க அணி ஒருநாள் தொடரை சமன் செய்யும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. பிங்க் நிற சீரூடை அணிந்து விளையாடிய தென் ஆப்ரிக்க அணி 6வது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.