கொல்கத்தா:

கால்களையும், கைகளையும் கட்டிக் கொண்டு கொல்கத்தா ஹுப்ளி ஆற்றில் குதித்த மேஜிக் நிபுணர் மாயமானார். அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


பிரபல மேஜிக் நிபுணர் ஹார்ரி ஹுடினி கை,கால்களைக் கட்டிக் கொண்டு நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருப்பார்.

அதேபோல், கடந்த ஞாயிற்றுக் கிழமை கொல்கத்தாவில் ஹவுரா பாலம் அருகே ஹுக்ளி ஆற்றில் கை, கால்களைக் கட்டிக் கொண்டு இந்திய மேஜிக் நிபுணர் சஞ்சல் லஹரி குதித்தார்.
இதை ஏராளமானோர் நேரில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவரது உடலில் 6 இடங்கள் கட்டப்பட்ட நிலையில், அவரது உடலோடு பிணைக்கப்பட்ட சங்கிலியை பிடித்தவாறு 2 படகுகளில் கண்காணித்தபடி சென்று கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் மேஜிக் நிபுணர் சஞ்சல் லஹரி மாயமானார். அவரை போலீஸாரும், நீச்சல் பயிற்சி பெற்றவர்களும் நீண்ட நேரம் தேடியும்  கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்த போலீஸார், லஹரியின் உடல் கிடைக்கும் வரை, அவர் இறந்ததாக அறிவிக்க முடியாது என்றனர்.

இந்த சம்பவத்தை நேரில் படம் பிடித்த உள்ளூர் பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் ஜெயந்த் ஷா கூறும்போது, மேஜிக்குக்காக ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் சரியாக செய்தால் அது மேஜிக் ஆகும். தவறாக செய்தால் அது சோகம் ஆகும் என்றார்.

தண்ணீருக்கு மூழ்கி மேஜிக் செய்வது லஹரிக்கு புதிதல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்பே இதே ஆற்றில் கண்ணாடி பெட்டிக்குள் அடைக்கப்பட்டு தண்ணீருக்குள் போடப்பட்டார்.
சிறிது நேரத்தில் பத்திரமாக திரும்பினார். இதை நான் நேரில் பார்த்தேன்.
இந்த முறை வராமலேயே போய்விடுவார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று கண்கலங்கியபடி கூறினார்.