டெல்லி: பிரிட்டன் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரிட்டன் உடனான விமான போக்குவரத்தை டிசம்பர் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. பிரிட்டன் இந்தியா இடையே விமானங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக பிரிட்டன் உடனான விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதிக்கு பின்னரும் நீட்டிக்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது: இந்தியா – பிரிட்டன் இடையே வாரத்திற்கு 67 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் 2,000  முதல் 2,500 பேர் பயணிக்கின்றனர்.

இதனிடையே பிரிட்டனில் தற்போது புதிய வகை கொரோனா பரவி வருவதால், பிரிட்டனிலிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தியா வந்த நபர்கள் குறித்து ஆய்வு செய்து பரிசோதனை செய்யப்படுகிறது. இது வரை 7 பேருக்கு புதியவகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார்.