டில்லி:
கையில் பணம் இருந்தும் பிச்சைக்காரர்களைப்போல மக்கள் அல்லாடுகிறார்கள்.  இந்த நிலையைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியா முழுதும் மிகப் பெரிய “பணக் கலவரம்” மூளும் அபாயம் இருப்பதாக  பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு வெளியானதில் இருந்து, மக்கள் அலைபாயத்துவங்கிவிட்டனர்.  இந்தியா முழுதும் உள்ள மக்கள், பழைய பண நோட்டை வைத்துக்கொண்டு புதிதாக மாற்றுவதற்கு வங்கி, அஞ்சலகம், ஏ.டி.எம். என்று நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.
ஆனால் வங்கிகள் பலவற்றில் போதுமான பணம் இல்லாமை, அதீதமான கூட்ட நெரிசல் ஆகியவற்றால் பெரும்பாலோர் பணம் எடுக்க முடியவில்லை. ஏ.டி.எம்.கள் பெரும்பாலானவை செயல்படவில்லை. அஞ்சலகங்களிலும் இதே நிலை.
இதையெல்லாம் மீறி பணத்தை மாற்ற முடிந்தாலும் அதிகபட்ச அளவாக நான்காயிரம் ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என்கிற நிலை. ஏ.டி.எம்.மில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்கிற நிலை.
தற்போது இதை நான்காயிரத்து ஐநூறு, இரண்டாயிரத்து ஐநூறு என அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் பள்ளி கட்டணம், மருத்து கட்டணம், போன்றவைகளை கட்ட இந்தத் தொகை போதுமானதாக இல்லை. மேலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வைத்திருப்போர், பை நிறைய பணம் வைத்திருந்தும் செலவு செய்ய வழியின்றி தவிக்கிறார்கள்.  உரிய பொருட்களை வாங்க முடியாத நிலை.
0“நாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தைக்கூட செலவு செய்ய முடியாதபடி, எங்களை பிச்சைக்காரரர்களாக்கிவிட்டது அரசு” என்ற ஆதங்கம் பெரும்பாலான மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆதங்கம் கொந்தளிப்பாகவும் மாறிவருகிறது.
வங்கி பணியாளர்களிடமும், காவலுக்கு இருக்கும் காவலர்களிடமும் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் மக்கள்.
பொறுமைக்குப் பெயர் போன தமிழகத்திலும் ஆங்காங்கே மக்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.  கோவையில் வங்கி பணியாளர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், சக வாடிக்கையாளர்களிடையே பெரும் கைகலப்பு ஏற்பட்டது ஒரு உதாரணம்.
கேரளாவில் ஒரு வங்கியை மக்கள் அடித்து உடைத்து தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதே போல சீலம்பூர் என்ற இடத்தில் மக்கள் கடும் கொந்தளிப்புடன் ரூபாய் நோட்டுக்களை ஏற்க மறுத்த கடைக்குள் புகுந்து சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உ.பியில் ரேசன் கடையை உடைத்து பொருட்களை சூறையாடினர் மக்கள். டில்லியில் தனியார் கடையிலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.
போதிய அளவுக்கு பணத்தை இருப்பு வைக்காமல் அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்தது மிகப் பெரிய முட்டாள்தனம் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.
ஆளும் பா.ஜ.கவைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி போன்றோரே இப்படி குற்றம் சாட்டுவது குறிப்பிடத்தக்கது.
பல வங்கிகளில் சில்லறை இல்லாமல் 2000 ரூபாயாகவே தருகிறார்கள். “இதை வைத்துக்கொண்டு எப்படி காய்கறியோ, ஒரு பாக்கெட் பாலோ, தினசரி செய்தித்தாளோ வாங்க முடியும்” என்று கொந்தளிக்கிறார்கள் மக்கள்.
“இத நிலைமை தொடர்ந்தால் இந்தியாவில் பணக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. ஆகவே நிலைமையை இயல்புக்குக் கொண்டுவர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.