பெண்களுக்கு பாதுகாப்பில்லாத உலக நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம் ….!?

லகம் முழுவதும் உள்ள நாடுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இது இந்திய மக்கள் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விசயம். இந்தியாவின் மதிப்பு உலக மக்களிடையே குறைந்து வருவதையே இது காட்டுகிறது.

உலகில் பழமை வாய்ந்த கலாச்சாரங்களில் இந்தியர்கள் கலாச்சாரமும் ஒன்று.  கலாச்சாரத்திற்கு பேர்போன இந்தியா இன்று கலாச்சார சீர்கேடுகளால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நாடாக உருமாறி உள்ளது. இந்தியாவின் அடையாளத்தை புகழ்ந்து வந்த உலக நாடுகள் இன்று இந்தியாவில் வேரூன்றி வரும் மேற்கத்திய கலாச்சரம் மற்றும் அதன் காரணமாக   இனவெறி, பாலியல் வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்து ஆடுகிறது.

இந்த நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் குறித்து ஐ.நாவின்  193 நாடுகளை சேர்ந்த சேர்ந்த 550 வல்லுநர்களிடம் ஆய்வு நடத்தி, அந்த பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இந்த பட்டியலில்  பெண்களுக்கு எதிராக அதிக கொடுமைகள் நடைபெறும் நாடாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாகவும் இந்தியா முதலிடத்தில் உளளது.

இந்த பட்டிலில் இரண்டாவது இடத்தை ஆப்கானிஸ்தானும், 3வது இடத்தை  சிரியாவும், பாகிஸ்தான் 6து இடத்திலும், அமெரிக்கா 10 வது இடத்திலும் இருப்பதாக தெரிவித்து உள்ளது. மேலும், காங்கோ, சோமாலியா போன்ற நாடுகளும் பெண்களுக்கு எதிரான போக்கில் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில், 2007 முதல் 2016க்கு இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 83 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில், ஒரு மணி நேரத்திற்கு 4 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறுவதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் ஸ்திரமற்ற பாகிஸ்தானில் கூட பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகம் நிகழ்வதில்லை என்றும், குடும்ப வன்முறை மற்றும் உளவியல் சிதைவு போன்ற பாதிப்புகளே அதிகம் காணப்படுவதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அண்மையில், ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டெய்ன் என்பவர் (Harvey Weinstein) மீது 70க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார்கள் கூறியதை தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மீ டூ (Mee Too) என்ற இயக்கம் அமெரிக்காவில் தொடங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்த அமைப்பின் காரணமாக  அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் ஓரளவு குறைந்துள்ளதாகவும்  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, நிர்பயா விவகாரத்திற்குப் பின்னரும் கூட, போதிய விழிப்புணர்வோ, தடுப்பு நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என்றும் ஆய்வில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான  கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, துன்புறுத்தல், பெண் சிசுக்கொலை,பெண்கள் மீதான அடக்கமுறை போன்றவற்றால்  இந்தியாவை புறக்கணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.,

பொருளாதாரம் மற்றும் விண்வெளி மற்றும் தொழில்நுட்பத்தில் உலf நாடுகளிடையே  மிக வேகமாக வளர்ந்துவரும் இந்தியா,  பெண்களுக்கு எதிரான வன்முறையில் பின்தங்கி இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது கருத்து தெரிவித்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள்,  இந்தியாவில், பாலியல் அடிமைத்தனம் மற்றும் உள்நாட்டு அடிமைத்தனம், மற்றும் கட்டாய திருமணம், கல்லெறிதல் மற்றும் பெண் சிசுக்கொலை போன்ற பழக்க வழக்கங்கள் உட்பட, மனித கடத்தல் போன்றவற்றால்,  பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து, இந்தியாவின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்  கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.