தொழில் நடத்த வசதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 77வது இடம்
எளிதாகத் தொழில் நடத்தும் வசதி நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77வது இடத்தை பிடித்துள்ளது. உலக வங்கி இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் நூறாவது இடத்தில் இருந்த இந்தியா முன்னேறி 77வது இடத்தை பிடித்தது.
ஆண்டுதோறும் எளிய முறையில் தொழில் நடத்தும் வசதிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் உலக வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 190 நாடுகளில் இந்தியா 130வது இடத்தை பிடித்தது. அதற்கு முன்பாக நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற 2014ம் ஆண்டு இந்தியா 142வது இடத்தில் இருந்தது.
அதன்பிறகு உலக அளவில் தொழில் துறை சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்க நரேந்திர மோடி பல்வேறு யுக்திகளை கையாண்டார். இதற்காக 10 அளவுகோல்கள் கையாளப்பட்டன, அதில் தொழில் தொடங்குதல், கட்டுமான அனுமதிகள் பெறுவது, மின்சாரம் பெறுவது, சொத்தைப் பதிவு செய்தல், கடன் பெறும் வசதி, சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாப்பது, வரி செலுத்துதல், எல்லைதாண்டிய வர்த்தகம், ஒப்பந்த அமலாக்கம், திவால் தீர்வு ஆகிய 10 அளவுகோல்கள் கடைபிடிக்கப்பட்டன.
இது குறித்து மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தன் ட்விட்டரில், “6 முக்கிய குறியீடுகளில் நாம் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கண்டுள்ளோம், தெற்காசிய நாடுகளில் இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளது, 2014-ல் 6ம் இடத்தில் இருந்தது ” என்று தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு ட்வீட்டில், “ உலக வங்கியின் தொழில் செய்ய எளிதான நாடுகள் குறியீட்டில் இந்தியா பல படிகள் முன்னேறியிருப்பதோடு, பிரிக்ஸ் நாடுகளில் தொடர்ச்சியான முன்னேற்றம் கண்டுள்ளது இந்தியா தான் ” என்று சுரேஷ் பிரபு பதிவிட்டுள்ளார்.