இந்தியாவின் வளர்ச்சிக்கு எளிமையான ஜிஎஸ்டி அவசியம்….சர்வதேச நாணய நிதியம்

வாஷிங்டன்:

இந்தியா உயர் வளர்ச்சயை அடைய ஜிஎஸ்டி.யை எளிமைபடுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கிகளை தூய்மைபடுத்த வேண்டும் என்றும், தொழிலாளர் மற்றும் நிலம் போன்ற சந்தைகளில் சீரமைப்பு நடவடிக்கைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தொடர்பு துறை இயக்குனர் கெரி ரைஸ் கூறுகையில்,‘‘ ஜிஎஸ்டி.யை அமல்படுத்துவது நிர்வாகிகளுக்கு சிக்கலான விஷயமாக உள்ளது. அதனால் அதை எளிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. ஆசிய பசிபிக் நாடுகளுக்கான ‘ரீஜனல் எக்னாமிக் அவுட்லுக்’ அறிக்கையில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2018ல் 7.4 சதவீதமும், 2019ல் 7.8 சதவீதமும் வளர்ச்சி அடையும் என்று குறிப்பிட்டுள்ளது.

37 நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2018&19ம் ஆண்டில் இந்தியா மீண்டு வருவது தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். வங்கி கடன் திட்ட சீரமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வங்கி செயல்பாட்டை தூய்மைபடுத்த வேண்டும். கார்பரேட் நிறுவனங்களின் வரவு செலவு திட்ட அறிக்கை மற்றும் பொது துறை வங்கிகளின் அதிகரிப்பு, எளிமையான ஜிஎஸ்டி அமைப்பு போன்றவற்றின் கவனம் செலுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்’’ என்றார்.