பாலியல் வழக்குகள் விசாரிக்க 1023 சிறப்பு நீதிமன்றங்கள்: சட்ட அமைச்சகம் பரிந்துரை

டில்லி:

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பான  வழக்குகளை விசாரிக்க 1,023 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என சட்ட அமைச்சகம் மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.

நாட்டில் அண்மைக் காலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள். பெண்களுக்கு எதிரான போக்குகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சிறுமிகள் உள்பட அனைத்து தரப்பு பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது.

இதை தடுக்கும் பொருட்டு, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், அதற்கான விசாரணையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் வகையில்  மத்திய அரசு பல்வேறு சட்ட திருத்தங்கள் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களை கொண்டுவர முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு களை விசாரிக்க நாடு முழுவதும் 1,023 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக சட்ட அமைச்சகம் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரையில், இந்த சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க ரூ. 767.25 கோடி செலவாகும் என்றும், இதில் மத்திய அரசின் தரப்பில் ரூ. 474 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும் என கூறப்பட்டுள்ளது.