டெல்லி:

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா 4 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு வந்த பங்களாதேஷ் பிரதமர் என்பதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக டெல்லி வந்த ஷேக் ஹசீனாவை விமானம் நிலையத்திற்கே சென்று பிரதமர் மோடி வரவேற்றார்.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் ஷேக் ஹசினாவுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதவ் பிறகு ஷேக் ஹசினா டெல்லி ராஜ்கட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம் சென்றார். காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஷேக் ஹசினா மற்றும் -பிரதமர் மோடி இடையில் நடைபெற்ற பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின் இரு நாடுகளுக்கும் இடையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இரு நாடுகளுக்கும் இடையே 22 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் பங்களாதேஷ் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக ரூ. 4.5 பில்லியன் டாலரை கடனாக வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது போன்ற ஒப்பந்தம் ஏற்படுவது இது தான் முதல் முறை.

தொடர்ந்து நிருபர்களிடம் மோடி பேசுகையில், ‘‘பாதுகாப்பு, புதிய வருவாய், தொழில்நுட்பம், இளைஞர்கள் வேலை வாய்ப்பு , நீதி துறை, அணு சக்தி, வங்கதேசம் இந்தியா இடையே ரயில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 600 மெகாவாட் எரி சக்தி வங்க தேசத்திற்கு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. நதி நீர் பங்கீடு தொடர்பாக டீஸ்டா ஒப்பந்தம் தொடர்பாக விரைவில் தீர்வு காண்போம்” என்றார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசுகையில், ‘‘இந்தியா முக்கியமான அண்டைய நாடுகளில் ஒன்றாகும். இரு நாடுகளின் இணைப்பு அம்சம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். எல்லை அமைதிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும்’’ என்றார்.

மேலும், டெல்லி பார்க் தெருவுக்கு தனது தந்தையும், பங்களாதேஷ் நாட்டின் நிறுவனருமான சேக் முஜிபுர் ரஹ்மான் பெயர் சூட்டியதற்கு ஹசினா நன்றி தெரிவித்தார். மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தை இரு பிரதமர்களும் தொடங்கி வைத்தனர். வடக்கு பெங்கால் ரதிகபூர் மற்றும் பங்களாதேஷில் பிரால் இடையிலான அதிவேக சரக்கு ரெயில் போக்குவரத்து இதில் அடங்கும்.