புதுடெல்லி:

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கையை சர்வதேச அளவில் கண்காணிக்க, மூன்றாம் நாடுகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் பால்கோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் முகாம் இருந்த இடம்.

காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் பால்கோடில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா விமானப்படை தாக்குதல்களை நடத்தியது.

இதன்பின்னர், பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் செயல்படுதை தடுக்கவும், தீவிரவாத நடவடிக்கையை தடை செய்யப்பட்டதை சரிபார்க்கவும் பாகிஸ்தானை இந்தியா கேட்டுக் கொண்டது.

அதன்பின்னரும், தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதில் பாகிஸ்தான் அக்கறை காட்டவில்லை என இந்தியா கருதுகிறது.

எனவே, தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கையை கண்காணிக்க, மூன்றாம் நாடுகளின் சர்வதேச கண்காணிப்புக்குழுவை அமைக்கும் முயற்சியில் இந்தியா மேற்கொண்டுள்ளது.

இது குறித்து உயர் அதிகாரிகள் கூறும்போது, “தீவிரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், மும்பை தாதா தாவூத் இப்ராகீம் மற்றும் ஹிஜ்புல் முகைதீன் தலைவர் சையது சலாஹுதீன் ஆகியோரை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்திருக்க வேண்டும்.
ஜெய்சி இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஜாரின் புல்வாமா தாக்குதல் தொடர்பு குறித்த ஆதாரத்தையும், இந்தியாவை குறிவைத்து செயல்படும் மற்ற தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய ஆதாரத்தையும் பாகிஸ்தானிடம் இந்தியா கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கொடுத்துள்ளது” என்றனர்.