ஆகிய கோப்பை கிரிக்கெட்: அட்டவணையில் மாற்றம் இன்றி இந்தியா-பாக் போட்டி

சியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, திட்டமிடப்பட்ட அட்டவணைப் படியே நடக்க இருக்கிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் வருடத்தில் இருந்து நடந்து வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பையை கைப்பற்றியிருக்கின்றன.

இந்த நிலையில் 14- வது போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இந்தப் போட்டியில் முதல் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்க இருக்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்ற இருக்கின்றன.

தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும்.

முதல் போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷும் மோத இருக்கின்றன.

 

 

 

செப்டம்பர் 19-ம் தேதி இந்திய  பாக் அணிகளுக்கு இடையே போட்ட நடக்க இருக்கிறது.

அதற்கு முந்தைய நாள் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் இந்திய அணி, ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் அடுத்த நாளே பாகிஸ்தான் அணியுடன் விளையாடும்படி  அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.  ஆனால் பாகிஸ்தான் அணிக்கு இரண்டு நாள் ஓய்வு கிடைக்கிறது.

இதனால் இந்த அட்டவணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

“பாகிஸ்தானுக்கு மட்டும் ஓய்வு கொடுத்துவிட்டு, இந்தியாவுக்கு ஓய்வு கொடுக்காமல் மறுநாளே விளையாட வைப்பது நியாயமல்ல. இந்த அட்டவணை, சரிவர தயாரிக்கப்படவில்லை. ஆகவே இந்த தேதியை மாற்ற வேண்டும்” என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் உட்பட பலர், இந்த போட்டியில் இந்தியா விளையாடக் கூடாது என்று தெரிவித்தனர்.

வீரேந்திர சேவாக்,  இது குறித்து கூறும்போது,  அட்டவணையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இது சரியான அட்டவணை  அல்ல. ஒரு போட்டி விளையாடி முடித்த பிறகு ஒரு வீரர் மீண்டும் உடல் தகுதி பெற, குறைந்தபட்சம் 48 மணி நேரம் தேவைப்படும். காரணம், ஒரு வீரர் மூன்றரை மணி நேரம் பீல்டிங் செய்கிறார். அதோடு ஒரு பேட்டிங்கில் இரண்டு மணி நேரம் விளையாடினால் மொத்தம் ஐந்தரை மணி நேரம் ஆகும். ஆகவே  உடல் தகுதி பெற 24 முதல் 48 மணி நேரம் வரை தேவைப்படும். ஆகவே ஆசியக் கோப்பையில் இந்தியாவின் அட்டவணையை பிசிசிஐ மாற்றி அமைக்க வேண்டும்”  என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் எந்த வித மாற்றமும் இல்லாமல் ஆசிய கோப்பைப் போட்டி திட்டமிடப்பட்ட அட்டவணைப்படியே நடக்க இருக்கிறது. இதற்கான ஒப்பந்தந்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவரும் அபுதாபி அமைச்சருமான சேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியும் நேற்று கையெழுத்திட்டார்கள்.