புதுடெல்லி: ஆண்களுக்கு இணையான பெண்களின் சமூக வளர்ச்சி நிலை ஒப்பீட்டில், உலகளவில் இந்தியா 112வது இடத்தில் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய ஆய்வை உலகப் பொருளாதார அமைப்பு ஆண்டுதோறும் நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆய்வு மொத்தம் 153 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்தாண்டு ஆய்வில் இந்தியாவுக்கு 112வது இடம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு 108வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 4 இடங்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு 106வது இடமும், இலங்கைக்கு 102வது இடமும், பாகிஸ்தானுக்கு 151வது இடமும் வழங்கப்பட்டுள்ளது. பட்டியலில் முன்னணியில் இருப்பது மக்கள்தொகை மிகவும் குறைந்த ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து.

ஆண் – பெண் வளர்ச்சி நிலைகளிலுள்ள வேறுபாடுகளை உலகளவில் குறைப்பதற்கு இன்னும் 108 ஆண்டுகள் வரை ஆகும் என்று கடந்தாண்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தாண்டு அந்த அளவு 99.5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம், பணி மற்றும் அரசியல் ஆகிய பிரிவுகளில் இந்த இடைவெளி அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.