இணைய சேவை பயன்பாட்டில் உலகளவில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

புதுடெல்லி: ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால், இணைய சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில், உலகளவில் இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உலகளவில் இணைய சேவையைப் பயன்படுத்துவோரில் இந்தியர்களின் எண்ணிக்கை 12%. இந்த விஷயத்தில், அமெரிக்காவின் பங்கே வெறும் 8% என்பதையும் கவனிக்க வேண்டும்.

உலகளவில், இணையதள சேவைப் பயன்பாட்டில் சீனாவே முன்னிலை வகிக்கிறது. அந்நாட்டின் பங்கு 21%. இந்தியாவில் இந்தளவிற்கு இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு ரிலையன்ஸ் ஜியோவின் வருகையே காரணம் என்று கூறப்படுகிறது.

உலகளவில் ஒரு சிறந்த இணைய நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ மதிப்பிடப்படுகிறது. உலகளவில் இணையம் பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 3.8 பில்லியன். இது உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் உலகளாவிய எண்ணிக்கை விகிதம் மெதுவான முறையில் அதிகரித்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில் அதன் வளர்ச்சி விகிதம் 6%. அதேசமயம், 2017ம் ஆண்டில் 7% என்பதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.