மாலத்தீவுக்கு இந்தியா ரூ.10,000 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

மாலத்தீவு நாட்டின்  சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக, ரூ 10, 000 கோடி நிதியுதவி அளிப்பதாக  பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மாலத்தீவு நாட்டின் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார். அவர் இந்திய பிரதமர் மோடியை டில்லியில் நேற்று (திங்கள்கிழமை ) சந்தித்தார்.

சந்திப்பின்போது, இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். சுற்றுலா, பொது சுகாதாரம், , முதலீடுகளை அதிகரிப்பது ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

சந்திப்புக்கு பின்பு பிரதமர் மோடியும், அதிபர் முகமது சோலியும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி, “இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது.  மாலத்தீவில் அமைதியை நிலைநாட்டவும்  அந்நாட்டின் வளர்ச்சிக்காகவும் இந்தியா எப்போதும் துணை நிற்கும். இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.  பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராடும். இரு நாடுகளின் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் படியான செயல்களுக்கு நாட்டில் அனுமதியில்லை. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்.

மாலத்தீவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக சுமார் ரூ. 10,000 கோடி இந்தியா அளிக்கும்.  தீவு நாடுகளில் இந்திய நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. ஆகவே  இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாலத்தீவுடன் நல்லுறவை மேம்படுத்த இந்தியா விரும்புகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவை நெருக்கமாக்க, கலாசாரம், சரக்கு மற்றும் சேவைகள், தகவல்கள் அனைத்தையும் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும்” என்று மோடி தெரிவித்தார்.

மேலும், காமன்வெல்த் அமைப்பில் மீண்டும் மாலத்தீவு இணைய இருப்பதை வரவேற்பதாக மோடி தெரிவித்தார்.

அடுத்து பேசிய மாலத்தீவு அதிபர் முகமது சோலி, “கடல் பாதுகாப்பு.. குறிப்பாக இந்திய பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.  மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக மாறுவதற்கு மாலத்தீவு ஆதரவு அளிக்கும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை முகமது சோலி சந்தித்தார். இரு நாடுகளிலும் உள்ள உள்நாட்டு பிரச்னைகள் மற்றும் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாலத்தீவின் முன்னாள் அதிபராக இருந்த அப்துல்லா யாமீன், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அங்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். இதையடுத்து  இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு மோசமடைந்தது. பிறகு நடந்த தேர்தலில் முகமது சோலி வெற்றி பெற்றார்.அவரது பதவியேற்பு நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி கடந்த மாதம் மாலத்தீவு சென்றிருந்தார். அப்போது, மாலத்தீவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த இருப்பதாக  மோடி தெரிவித்தார். அதையடுத்து இந்தியா-மாலத்தீவு இடையேயான நட்புறவு, ஒத்துழைப்பை புதுப்பித்துக் கொள்ள இரு நாட்டுத் தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்நிலையில் மாலத்தீவு அதிபர் இந்தியா வந்திருக்கிறார்.

இந்த நிலையில், அரசியல் பார்வையாளர்கள், “இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்த முனையும் சூழலில்  இந்தியா-மாலத்தீவு இணைந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது” என்று தெரிவிக்கிறார்கள்.

அதே நேரம், “கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு எதிர்காலம் குறித்த கேள்வியோடு இருக்கும்  டெல்டா மாவட்ட மக்களுக்கு வெறும் ஐநூறு கோடி ரூபாய் மட்டும் நிவாரண நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு, இன்னொரு நாட்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாயை வாரி வழங்கியுள்ளதே” என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.